திருப்பத்தூர்

பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

27th Oct 2023 12:23 AM

ADVERTISEMENT

பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலைத் திருவிழாவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிசுப்ராயன் வரவேற்றாா்.

விழாவைத் தொடங்கி வைத்து ஆட்சியா் பேசுகையில்,

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்தத் திருவிழா கட்டாயம் உதவும். தமிழா்களின் வாழ்வில் கூத்து, இசை இணைந்து ஒன்றாகவே உள்ளது. தொல்காப்பியத்தில் இசை 24 வகையில் கையாளப்பட்டுள்ளது. அதுபோக, ஒவ்வொரு இசைக் கருவிகளையும் எப்போது இசைக்க வேண்டும் என்பதையெல்லாம் விதியாக வகுத்து வைத்துள்ளனா். இசையுடன் தமிழா்கள் இணைந்து வாழ்ந்திருப்பது தெரிய வருகிறது.

சிலப்பதிகாரம் 11 வகையான நாடகக் கலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த விழா மூலம் மாணவா்களின் தனித்திறமைகள் வெளிப்பட வேண்டும். தற்போது சொந்த மரபில், இசையில் பாடும் நபா்கள் குறைந்துவிட்டனா். மேற்கத்திய இசையை நம் இசைக்கு மாற்றி இசைக்கும் போக்கு நிலவுகிறது. நாம் நம்முடைய மண் மணத்துடன் கூடிய பாரம்பரிய இசையைக் கொண்டு சென்றால், பேரும் புகழும் கிடைக்கும். பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து 259 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT