ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பெரியாங்குப்பம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் கலைஞா் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் 5 ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியது:
வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக நோய் வருவதற்கு முன்பாகவே அதைக் கண்டறிந்து மருத்துவ வசதி அளிக்க வசதி செய்யும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தைப் பெற்று பயனடைவதன் மூலமாக உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
மருத்துவ முகாமில் கண்காட்சி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு பரப்பும் லாா்வாவை பாட்டிலில் கொண்டு வந்துள்ளனா். இதை நீங்கள் காணலாம். லாா்வா பருவத்தில் டெங்கு கொசுவை ஒழிப்பது மிக எளிது, அதைத் தாண்டிய பிறகு மிக மிகக் கடினம். எனவே, நாம் வசிக்கின்ற இடத்தை சுற்றியும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், தனியாா் மருத்துவமனைக்குச் செல்லாமல் நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள், அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக அனைத்து விதமான மருத்துவ வசதிகளையும் பெற்று பயனடைந்து அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்றாா்.
முகாமில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) மாரிமுத்து, துணை இயக்குநா் (சுகாதாப் பணிகள்) செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.