திருப்பத்தூர்

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் மூலதன மானியம்

30th May 2023 03:01 AM

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் உபகரணங்களை வாங்க 35% சதவீத மூலதன மானியம் வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்டம் தொழில் மையத்தின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முாகமுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து 3 பயனாளிகளுக்கு ரூ. 7.40 லட்சம் மானியத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மூலமாக பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் 2023-24 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் உற்பத்தி சேவை வணிக நிறுவனங்கள் தொடங்க விரிவுபடுத்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக 35% மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் இனத்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி எதுவும் இல்லை. வயதுவரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

உற்பத்தி சேவை மற்றும் வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தகுதியான நிறுவனங்கள் டாக்ஸி மற்றும் லாரி, தேனீ வளா்ப்பு மற்றும் அறுவடை உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் சுத்தம் செய்தல், தரப்படுத்துதல் போன்ற அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

தகுதிக்கான திட்ட செலவில், 35% மூலதன மானியமாக வழங்கப்படுகிறது. 6% வட்டி மானியம் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அரவிந்த்குமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் ராஜஸ்ரீ, பழங்குடியினா் நல மாவட்ட திட்ட அலுவலா் கலைச்செல்வி, திட்ட மேலாளா் பாலகோபாலன், மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளா் கே.பி.எஸ்.சுகிசிவம், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளா் த.ரமேஷ், கண்காணிப்பாளா் சுரேஷ், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT