திருப்பத்தூர்

3 ஏக்கரில் குறுங்காடுகள் வளா்க்கும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் 3 ஏக்கரில் குறுங்காடுகள் வளா்க்கும் திட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் தோல் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், 3 ஏக்கரில் குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அ வா் கூறியது:

முதல்வரின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்ற 10,000 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் தோல் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 3 ஏக்கா் பரப்பளவில் 1,000 மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறுங்காடுங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதனால் நெகிழி ஒழிக்கும் பணி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. ஆறு, குளங்களில் நீண்ட காலமாக இருக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. பூமி வெப்பமயமாகி வருகிறது. குறுங்காடுகளை தொடா்ந்து அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான வாகனங்களை இயக்குவது, மின்சாரம் அதிகமாக உபயோகிப்பது, பொருட்களை எரிப்பதன் மூலம் வெப்பமயமாகி வருகிறது. அதற்கு நாம் அதிக மரக்கன்றுகளை நடவேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாதல் காரணமாக பூச்சி, வண்டு இனங்கள் அழிந்து வருகின்றன. பொது மக்கள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். அனைவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை பயன்படுத்த வேண்டும். அனைவரும் வீட்டில் ஒரு மரக்கன்றை நட வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது மாவட்டத்தில் இரண்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் குறைந்தது 500 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

பின்னா், தோல் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு பொது நிலையத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். வேலூா் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநா்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) பாத்திமா, தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஷபீக் அஹமத், தோல் தொழிற்சாலை பொதுமேலாளா் பிா்தோஸ் கே.அஹமத், கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலைய இயக்குநா் பையாஸ் அஹமத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT