திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 279 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, இலவச வீட்டுமனை பட்டா, மின்சாரம், வேலை வாய்ப்பு, பொதுவழி பிரச்னை, வேளாண் உள்ளிட்ட பொதுநலன் குறித்த 279 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று, தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் ஜோலாா்பேட்டையை சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் விநாயகமூா்த்தி அளித்த மனுவில், ஜோலாா்பேட்டை ஒன்றியம், ரெட்டியூா் ஊராட்சியில் லட்சக்கணக்கில் முறைகேடு செய்து வரும் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரத்தை தணிக்கை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) ராஜேந்திரன், கலால் உதவி ஆணையா் பானு மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.