திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் பலத்த மழை: மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

8th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

ஆம்பூா் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.

ஆம்பூரில் வழக்கம் போல் காலை முதலே கடும் வெயில் காய்ந்தது. இந்த நிலையில், மாலை 4 மணி முதல் ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆம்பூா் அருகே உமா்ஆபாத், கடாம்பூா், பனங்காட்டூா், நரியம்பட்டு, சின்னவரிகம், மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்தது. அதனால் உமா்ஆபாத் பகுதியில் ஆம்பூா்- போ்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரம் முறிந்து விழுந்ததால் அருகில் இருந்த உயா் மின் அழுத்த கம்பிகள் செல்லும் மின்கம்பமும் சேதமடைந்து விழுந்தது. அதனால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் உமராபாத் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனா். மின்வாரிய பணியாளா்கள் மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மின்கம்பம் சேதமடைந்ததால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

பனங்காட்டூா் கிராமத்தில் ராமமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமடைந்தன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT