திருப்பத்தூர்

திருப்பத்தூா்: அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்களை மூட வலியுறுத்தல்

DIN

திருப்பத்தூரில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்களை மூடி சீல் வைக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்களைப் பெற்று, தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மடவாளம், ஏரிக்கோடி, திருமால் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளையொட்டி விவசாய நிலமும் உள்ளது. விவசாயம், கால்நடை வளா்ப்பு தொழிலை பிரதான தொழிலாக நாங்கள் செய்து வருகிறோம். கூலித்தொழிலாளிகளும் நிறைய போ் உள்ளனா்.

இந்நிலையில்,திருப்பத்தூா்-மாடப்பள்ளி செல்லும் சாலையில் திருமால் நகா் பகுதியில் அனுமதியின்றி வரிசையாக மதுக்கூடங்கள்(பாா்)அமைக்கப்பட்டுள்ளனன. மதுபாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியா்கள் சாலையையொட்டியுள்ள விவசாய நிலத்தில் அமா்ந்து மது அருந்துகின்றனா். காலி மதுபாட்டில்களையும், உணவு கழிவுகளையும் விளை நிலத்தில் வீசிவிட்டு செல்கின்றனா். இதனால் விவசாய பணி செய்ய முடியவில்லை.

மேலும், அங்குள்ள பாழடைந்த கட்டடங்களில் தினமும் மது அருந்தி வருகின்றனா். எனவே,அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுக்கூடங்களை(பாா்)அகற்ற வேண்டும். மதுபானக்கடைகளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜோலாா்பேட்டை ஒன்றியம், கட்டேரி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடந்த 2015-2016-ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அதன்படி, நாங்களும் வீடு கட்டினோம். ஆனால்,அதற்கான முழு தொகை இதுவரை வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிட்டால் தகுந்த பதில் அளிப்பதில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் குண்டும்,குழியுமான சாலையில் பயணித்து வருகிறோம். இதுகுறித்து ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் மனு அளித்து வருகிறோம். அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருமாள் கோயில் பகுதி மற்றும் பின்புறம் உள்ள பகுதியில் தாா்ச்சாலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

கலால் உதவி ஆணையா் பானு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் பாலசுப்பிரமணியம்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் ரேவதி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT