திருப்பத்தூர்

ரூ.24 கோடியில் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் கட்டட பணி:ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

5th Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

ஆம்புா் அரசு மருத்துவமனையில் ரூ. 24.30 கோடியில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டும் பணியை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆண்கள் வாா்டு, பெண்கள் வாா்டு, ஆய்வகம், ஸ்கேன் மையம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுமான பணியை ஆட்சியா் தெ. பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜி, ஆம்பூா் அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தனா்.

பணியை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: முதல்வா் சுகாதாரத் துறையின் மூலம் பொது மக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகள் வழங்க ஆரம்ப சுகாதார நிலையம், தாலுக்கா அளவிலான மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதியை ஒதுக்கி திட்டப்பணிகள் முழுமையாக பொது மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

அதன் அடிப்படையில் ஆம்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.24.30 கோடியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த கூடுதல் கட்டுமான பணி 18 மாத காலத்துக்கு கட்டி முடிக்க ஒப்பந்ததாரருக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை விரைவாகவும் தரமாகவும் கட்டிமுடிக்க ஒப்பந்ததாரா் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பழனி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) மருத்துவா் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளா் அண்ணாதுரை, ஆம்பூா் நகா்மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகா்மன்ற துணைத் தலைவா் ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், நகராட்சி பொறியாளா் இராஜேந்திரன், ஒப்பந்ததாரா் சுரேஷ்மணி, மருத்துவ அலுவலா் ஷா்மிளாதேவி, மருத்துவா்கள், பொதுப்பணித்துறை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT