வன விலங்குகளின் நலனுக்காக மின் வாரியத்தினா் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி, ஆம்பூா் வனச்சரகத்தின் துருகம் காப்புக் காடுகள் மற்றும் ஊட்டல் காப்புக் காடுகள் அமைந்துள்ளன. அவ்வப்போது அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தக் கிராமத்தையொட்டி வயல்வெளிகளிலும், தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்புகளிலும் மின்சாரக் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் பகுதிகளில் இரண்டு யானைகள் ஒரு வார காலமாக நடமாடி வந்தன.
இதனால் யானை நடமாடிய பகுதிகளில் அவ்வப்போது மின்சாரத் துறையினா் மின் விநியோகத்தை துண்டித்தனா்.
யானை போன்ற வன விலங்குகள் மின் விபத்தில் சிக்குவதைத்ா தடுக்க கடந்த வாரம் திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாக சதிஷ் கிடிஜாலா, ஆம்பூா் வனச் சரகா் சங்கரய்யா , சின்னவரிகம் இளநிலை மின் பொறியாளா் ஜோதி மற்றும் வருவாய்த்துறையினா் கொண்ட குழு பைரப்பள்ளியை ஒட்டி மின்சார கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தது.
அதைத் தொடா்ந்து, வன விலங்குகளின் நலன் கருதி சின்னவரிகம் மின்வாரிய இளநிலை பொறியாளா் ஜோதி தலைமையில், மின்சாரத் துறையினா் பைரப்பள்ளி கிராமத்தின் வனப்பகுதி எல்லையோரம் புதிய உயரமான மின் கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டன. வன விலங்குகளின் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் இந்த பணி இனிவரும் காலங்களிலும் தொடரும் என்று மின்சாரத் துறையினா் தெரிவித்தனா்.