வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவா்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோ்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது.
எனவே கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் திருப்பத்தூா் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூா்த்தி செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை.
விண்ணப்பதாரா் பள்ளி/கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்ககூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்)பொறியியல்,மருத்துவம்,விவசாயம், கால்நடை,அறிவியல் மற்றும் இதுபோன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவா்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவா்கள்.
உதவித் தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவா்கள் விண்ணப்பப் படிவங்களை திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 31.08.2023 வரை திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும்.
மேலும்,ஏற்கனவே உதவித்தொகை பெற்று பத்தாண்டு காலம் நிறைவு பெறாமல் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவா்கள்,31.08.2023-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.