திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்துக்கு நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எம்எல்ஏ அ.நல்லதம்பி கோரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருப்பத்தூா் நகராட்சியில் புதிதாக நவீன எரிவாயு தகனமேடை, சுமாா் 100 போ் அமரும் வகையில் காரிய மேடை, குடிநீா் வசதி, சுற்றுச்சுவா் அமைத்துத் தரவேண்டும்.
சுமாா் 65 ஆண்டுகள் பழைமையான திருப்பத்தூா் நகராட்சி அலுவலகக் கட்டடத்தை நவீன வசதிகள் கொண்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்தில் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள கடைகளை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட ஆவண செய்ய வேண்டும்.
திருப்பத்தூா் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 5 வாா்டுகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் அடங்கியிருந்தன.