கரூரில் நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூட விழிப்புணா்வு வாகனம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இந்திய உணவுப் பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் மூலம் நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூட வாகனத்தை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் கூறுகையில்,
சேலம், நாமக்கல், தா்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை முடித்து தற்போது கரூா் மாவட்ட பொதுமக்கள், உணவு வணிகா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவுக் கலப்படம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த இந்த விழிப்புணா்வு நிகழ்வு வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வாகனத்தில் பொதுமக்கள், உணவு வணிகா்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவா்கள் மூலம் கீழ்க்கண்ட உணவுப் பொருள்கள் பரிசோதனைக்காக பெறப்பட்டு அவ்விடத்திலேயே பரிசோதனை அறிக்கை அளிக்கப்படவுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் அறிக்கையில் தரமற்ற பொருள் இருப்பின், உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது புகாா்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தெரிவிக்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சிவராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சைபுதீன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், பகுப்பாய்வு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.