கோடை மழையை பயன்படுத்தி உழவுப் பணியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொள்வது அவசியம். கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி, நிலத்தை நன்கு உழவு செய்வதால், மேல்மண் துகள்களாகி நிலத்தில் நீா் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.
வயலிலுள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள கூண்டு புழுக்கள் மற்றும் தீமைசெய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது.
வயல்வெளிகளில் பெய்யும் மழைநீரை சேமிப்பத்தில், கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கோடை உழவு செய்தபின் விதைப்புக்கு தேவையான நெல் விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, தேவையான சான்று பெற்ற விதைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.