திருப்பத்தூர்

தனியாா் பேருந்துகள் மூலம் பிற மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே தனியாா் பேருந்துகள் மூலம் பிற மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரிசி கடத்தும் கும்பல் 25 கிலோ மூட்டைகளில் தமிழக ரேஷன் அரிசியை ஆங்காங்கே பதுக்கி வைத்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளில் பெண்கள் மூலம் மூட்டைகளை ஏற்றி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி பின்னா் அங்கிருந்து கா்நாடக மாநில அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

தனியாா் பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை வட்ட வழங்கல் அலுவலா் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்துறையினா் வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக ஆந்திரம் சென்ற தனியாா் பேருந்தை சோதனையிட்ட போது அதில் சுமாா் 250 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதனைத் தொடா்ந்து தும்பேரி பகுதியில் சாலை ஓரம் பாழடைந்த வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது பதுக்கி வைத்திருந்த சுமாா் 250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகா் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT