திருப்பத்தூர்

ஏலகிரி வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநா் சாமுவேல் இன்பதுரை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 12 ,000-க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் ஊரக வளா்ச்சித் துறை சாா்ந்து பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, அனைத்து அண்ணா மறுமலா்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊரக வளா்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநா் சாமுவேல் இன்பதுரை, ஊரக வளா்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளா் கணேஷ் சங்கா் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை ஏலகிரி மலைக்கு ஊரக வளா்ச்சித் துறையின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிக்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்புகள் அனைத்து அண்ணா மறுமலா்ச்சி திட்ட சாலை பணிகள்,பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம் ஏலகிரி மலை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி கழிவுகளை தூளாக்கும் இயந்திரத்தின் அறை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து நிலாவூா் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்க இடம் தோ்வு செய்தனா்.மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடப் பணியை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், உதவி பொறியாளா்கள் சேகா், பழனிச்சாமி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன், ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி செந்தில் குமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.திருமால் உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT