திருப்பத்தூா் புதூா்நாடு மலைப் பகுதியில் 3,041 பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ், பல்வேறு துறைகள் சாா்பில் 1,121 பேருக்கு நலத் திட்ட உதவிகள் என மொத்தம் 4,162 பேருக்கு ரூ.12 கோடி 94 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தொடா்ந்து புதூா்நாடு மலை அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரமப் சுகாதார நிலையத்தில் ரூ.28.84 லட்சத்தில் கட்டப்பட்ட முதல் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு கட்டடம், மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டடம், திருப்பத்தூா் நகரில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம், நாட்டறம்பள்ளி ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை மையம் என மொத்தம் ரூ.2 கோடி 1 லட்சத்து 84 மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்.
முன்னதாக, ஏலகிரிமலை கோடை விழா அரங்கத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 759 பேருக்கு ரூ.5 கோடியே 27 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், அமைச்சா் எ.வ.வேலு பேசியது: புதூா்நாடு மலைப்பகுதியில் உள்ள 32 கிராமங்களில் சுமாா் 30,000 மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு, 30 படுக்கைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், புங்கம்பட்டு நாட்டில் ஒரு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், நெல்லிவாசல் நாடு, புலியூா், சோ்க்கானூா் ஆகிய பகுதிகளில் மூன்று துணை சுகாதார நிலையங்களும் அமைந்துள்ளன.
இந்திய அளவில் மலைவாழ் மக்களுக்கான முதல் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு ரூ.28.84 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 6 பச்சிளம் குழந்தைகளை பராமரித்து, சிகிச்சை அளிக்க முடியும் என்றாா்.
தொடா்ந்து கூட்டுறவுத் துறை மூலம் 28 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை மூலம் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, திட்ட இயக்குநா்கள்(மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) செல்வராசு, ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட பால்வளத் தலைவா் எஸ்.ராஜேந்திரன்,வேளாண் இணை இயக்குநா் பாலா,கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.