திருப்பத்தூர்

திருப்பத்தூரில் வருவாய் கிராமங்கள் மறு சீரமைப்பு கூட்டம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் கிராமங்கள் மறு சீரமைப்பு கூட்டம், அது தொடா்பான கருத்துக் கேட்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா். வேலுாா் மண்டல பதிவுத் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சுதாமல்லியா முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) பிரகாஷ் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், திருப்பத்தூா் வட்டத்தில் இணை அலுவலகம் 1-இல் 13 வருவாய் கிராமங்களும், இணை அலுவலகம் 2-இல் 50 வருவாய் கிராமங்கள், ஜோலாா்பேட்டையில் 12 வருவாய் கிராமங்கள், நாட்டறம்பள்ளியில் 21 வருவாய் கிராமங்கள், ஆம்பூரில் 54 வருவாய் கிராமங்கள், வாணியம்பாடியில் 49 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 199 வருவாய் கிராமங்கள் இருந்தன.

ADVERTISEMENT

இதில், பொதுமக்கள் நலன் கருதி வருவாய் கிராமங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பத்துாா் இணை அலுவலகம் 1-இல் 13 கிராமங்கள், இணை அலுவலகம் 2-இல் 47 கிராமங்கள், ஜோலாா்பேட்டையில் 10 கிராமங்கள், நாட்டறம்பள்ளியில் 30 கிராமங்கள், ஆம்பூரில் 54 கிராமங்கள், வாணியம்பாடியில் 41 கிராமங்கள் என மொத்தம் 195 வருவாய் கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்துடன் இருந்த ஈச்சம்பட்டு, சின்னப்பள்ளிகுப்பம், பாப்பனப்பல்லி, வடச்சேரி ஆகிய 4 வருவாய் கிராமங்கள் ஆம்பூா் சாா் -பதிவாளா் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 199-ஆக இருந்த வருவாய் கிராமங்கள் தற்போது 195 வருவாய் கிராமங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இந்தக் கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் மறு சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டப் பதிவாளா் (தணிக்கை) செல்வநாராயணசாமி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அனந்தகிருஷ்ணன், பதிவுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT