திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு இயற்கை உரம் இலவசமாக வழங்கப்படுகிறது வாணியம்பாடி நகராட்சி ஆணையா்

5th Sep 2022 12:31 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று நகராட்சி ஆணையா் மாரிசெல்வி தெரிவித்தாா்.

இந்த நகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வளையாம்பட்டு, இராமையன்தோப்பு ஆகிய பகுதிகளில் செயல்படும் குப்பைக் கிடங்குகள், குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படும் நுண்ணுர செயலாக்கம் மையங்களை நகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆய்வு செய்தாா்.

இதேபோல், நகராட்சியில் செயல்படும் 6 நுண்ணுர செயலாக்க மையங்களையும் அவா் பாா்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

பின்னா், நகராட்சி ஆணையா் மாரிசெல்வி கூறியது:

வாணியம்பாடி நகராட்சி நிா்வாகம் சாா்பில், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை 2015-2016 திட்டத்தின் கீழ், வாணியம்பாடி நகராட்சியின் 36 வாா்டுகளை 6 பகுதிகளாகப் பிரித்து, அங்கு சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகள் வளையாம்பட்டு, பெரியபேட்டை, இராமயன்தோப்பு, நூருல்லாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான 6 இடங்களில் ரூ.3 கோடியில் தலா ரூ.50 லட்சத்தில் செயல்படும் நுண்ணுர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, காய்கறிக் கழிவு உள்ளிட்ட மக்கும் குப்பைகளை இயந்திரம் மூலம் அரைத்து உரக் கிடங்களில் உள்ள தொட்டிகளில் நிரப்படுகிறது.

இந்த மையங்களில் உள்ள 16 தொட்டிகளில் நிரப்படும் குப்பைகளை சாணம் அல்லது ரசாயனம் தெளித்து 60 நாள்களில் சுழற்சி முறையில் இயற்கை உரமாகத் தயாரிக்கபடுகிறது. இந்த உரங்கள் 100 கிலோ முதல் 900 கிலோ வரை விவசாயிகளுக்கு இலவசமாகவே அளிக்கப்படுகிறது. 1 டன்னுக்கு மேல் வாங்கப்படும் உரத்துக்கு டன்னுக்கு ரூ.500 மட்டும் வசூலிக்கப்படுகிறது. தற்போது 10 டன் அளவுக்கு மேல் இயற்கை உரம் உள்ளது.

எனவே, வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் இயற்கை உரங்களை கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், மக்காத குப்பைகள் தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்படுகிறது என்றாா்.

ஆய்வின் போது, நகராட்சி பொறியாளா் சங்கா், மேலாளா் ஜெயபிரகாஷ், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT