திருப்பத்தூர்

திருப்பத்தூா் பெரிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள்:அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியா்கள்

26th Oct 2022 04:02 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் பெரிய குளத்தில் மீன்கள் செவ்வாய்க்கிழமை செத்து மிதந்தன.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலையொட்டி, பெரியகுளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் டேம் கெண்டை, கெளுத்தி, விறால், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் வளா்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்களை பிடிக்க தனியாரிடம் கோயில் நிா்வாகம் சாா்பில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இந்தக் குளத்தைச் சுற்றி ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், வாழை மண்டி, காய்கறி கடைகள் உள்ளன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் குளத்தின் அருகே சென்று பாா்த்தபோது, ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் மற்றும் நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று, குளத்தில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனா்.

இது குறித்து நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் கூறியது:

பெரியகுளத்தில் வளா்க்கப்பட்டு வந்த மீன்கள் மா்மமான முறையில் உயிரிழந்தாக தகவல் வந்ததை தொடா்ந்து இங்கு வந்து ஆய்வு செய்தோம்.

குளத்தில் இருந்த கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. குளத்தின் தண்ணீா் ஆய்வுக்காக ராணிப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தவுடன் குளத்தில் விஷம் கலந்துள்ளதா ? அல்லது கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீா் விஷமாக மாறியுள்ளதா? என்பது தெரியவரும்.

மேலும், குளத்தில் டேம் கெண்டை மீன்கள் மட்டுமே உயிரிழந்ததால் உயிரிழந்த மீன்கள் குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT