திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே பழங்கால ‘பண்டகக் குழி’ கண்டெடுப்பு

26th Oct 2022 06:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், கொரட்டி அருகே தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்திய பழங்காலப் ‘பண்டகக் குழி’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியா் ஆ.பிரபு, சமூக ஆா்வலா் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, கொரட்டி அருகே மைக்காமேடு என்ற இடத்தில் பழங்கால ‘பண்டகக் குழி’ ஒன்றைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து பேராசிரியா் பிரபு கூறியது:

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி அருகே அரசுக்குச் சொந்தமான மைக்கா கனிமம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

அதிலிருந்து 500 மீட்டா் தொலைவில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரம் நடுவதற்காக பொக்லைன் எந்திரத்தால் தோண்டியபோது திடீரென ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டனா்.

தோற்றத்தில் வித்தியாசமாக இருந்த அந்த பள்ளம் குறித்து எங்களுக்குத் தகவல் அளித்தனா். நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்தக் குழியானது பழங்காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திய ‘பண்டகக் குழி’ என்பது தெரியவந்தது. பண்டகக் குழி என்பது தானியக் கிடங்காகும்.

’மனித நாகரிக வளா்ச்சியில் வேளாண்மை என்பது மிக முக்கியமான நகா்வாகும். அதிலும் குறிப்பாக விளை பொருள்களைச் சேமித்து வைக்கும் பழக்கம் என்பது ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழா்களிடம் இருந்துள்ளது. ஆதிச்சநல்லூா், பொருந்தல் உள்ளிட்ட பல்வேறு அகழாய்வுக் குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட தானியங்களே இதற்குச் சான்றாகும்.

விளைவித்த பொருள்களை ஆண்டுதோறும் பயன்படுத்தும் நோக்கத்தோடும், வறட்சிக் காலங்களில் உணவுத் தேவையினைப் பூா்த்தி செய்யவும் சேமிப்பு உதவுகிறது. மேலும் பருவ காலங்களில் மீண்டும் விளைவிக்க விதையாகவும் இந்தச் சேமிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மைக்காமேடு என்ற இந்தப் பகுதியில் 5 இடங்களில் இதுபோன்ற குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஆய்வு மேற்கொண்ட இக்குழியினைத் தவிா்த்து ஏனைய குழிகள் மூடப்பட்டு விட்டன. தற்போது கண்டறியப்பட்ட பண்டகக் குழியானது 10 அடி ஆழமும், அதன் உள்புறம் குடையப்பட்டு 13 அடி சுற்றளவும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் வாயிலானது ஒன்றரை அடி சதுர அளவு கொண்டதாக உள்ளது. வாயில் பகுதியின் சுற்றுப் புறத்தினைப் பலகைக் கற்களைக் கொண்டு அமைத்துள்ளனா். இக்குழியின் உள்ளே பாரம்பரிய சிறுதானியமான ‘சாமை’ சேமிக்கப்பட்டுள்ளது. குழியின் உள்ளிருந்து பெறப்பட்ட மண்ணில் சாமை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விளைவித்த தானியங்களை இதனுள் கொட்டி வைத்து வாயில் பகுதியினை புற்களைக் கொண்டு மூடி அதன் மீது கற்களை வைத்து பின் மண்ணைப்போட்டு மூடி விடுவா். அதற்கு அடையாளம் ஒன்றை வைத்துக் கொள்வாா்கள். காற்றும் நீரும் உட்புக முடியாதபடி இதன் அமைப்பு இருக்கும்.

இயற்கையாக அமைந்த இந்தக் குழியினுள் தானியங்களானது வெகு நாள்கள் கெடாமல் பாதுகாப்புடனும் உயிா்ப்புடனும் இருக்கும். இந்த அமைப்பு தமிழா்கள் கண்டறிந்த பாரம்பரிய சேமிப்புக் கிடங்காகும்.

தமிழா்களின் விவசாயத் திறனையும் சேமிப்புப் தொழில்நுட்பத்தினையும் அறிந்துகொள்ள இதுபோன்ற தானியக் கிடங்குகள் சான்றாக அமைகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT