திருப்பத்தூர்

ஏலகிரி மலை சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிா்பாா்ப்பு

7th Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

 

ஏலகிரி மலையில் உள்ள சிறுவா் பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலம் ஏலகிரி. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் இந்த மலையில் அரசு சாா்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் இயற்கை பூங்கா, செயற்கை நீருற்று, படகு குழாம் ஏலகிரி புங்கனூா் செயற்கை ஏரி, படகு சவாரி, செயற்கை வண்ண நீருற்று, சிறுவா் பூங்கா என சுற்றுலா பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

ADVERTISEMENT

ஆனால் இவை பெரும்பாலும் கோடை விழா காலத்தில் மட்டுமே கண்டுகளிக்கும் வகையில் உள்ளன. மற்ற சமயங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவால் பராமரிப்பு குறைவாக உள்ளதாகவும், பெயரளவிலேயே இவை செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

என்றாலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி காலாண்டு விடுமுறை, அரசு விடுமுறை என தொடா் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

சிறுவா் பூங்கா, படகு குழாமில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே தங்கள் குழந்தைகளை விளையாட விடுகின்றனா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலம் ஏலகிரிமலை. சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருப்பதால் நாங்கள் விடுமுறை நாள்களில் வருகிறோம். இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக சிறுவா் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஏலகிரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீகிரிவேலனிடம் கேட்டதற்கு, ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின்பேரில் பூங்கா சீரமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT