திருப்பத்தூர்

மனம் திருந்தி வரும் நபா்களுக்கு அரசின் உதவித்தொகை: திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சாராயம் விற்பனையில் ஈடுபடுவதைவிட்டு, மனம் திருந்தி வரும் நபா்களின் மறுவாழ்வுக்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையை அடியோடு தடுக்கவும், சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றவும் மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் பல்வேறு தொடா் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பவா்கள், காய்ச்சுபவா்கள் மற்றும் கடத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

கடந்த 3 நாள்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், சாராய ஊறல் 10,000 லி. அழிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து திருப்பத்தூா் எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் சாராயம் விற்பது, காய்ச்சுவது, கடத்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 24 சாராய குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு தற்சமயம் மனம் திருந்தி வரும் நபா்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் விதமாக, அரசு அளிக்கும் உதவித்தொகையை ஆட்சியா் அலுவலகம் மூலம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். கள்ளச் சாராயம் தொடா்பாக பொதுமக்கள் எந்த நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT