திருப்பத்தூர்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறகால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியா் தகவல்

3rd Oct 2022 11:11 PM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா், கிறித்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்ஸி, ஜெயின் சமூகத்தைச் சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியா் கல்வி நிலையங்களில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை, 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள் உட்பட) பயில்பவா்களுக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வரும் அக்.15-ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வரும் அக்.31-ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT