திருப்பத்தூர்

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்க முயன்ற இருவா் லாரி மோதி பலி

2nd Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்க முயன்ற இருவா் லாரி மோதியதில் உயிரிழந்தனா்.

பள்ளிகொண்டா அருகே பொய்கை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் வினோத்குமாா் (30). இவா் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராம தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த வழியாக ஒசூருக்கு தீவனம் ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து காட்பாடி அருகே மேல்மாயில் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (35), சுந்தரமூா்த்தி (33) ஆகியோா் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஆட்டோவிலிருந்த வினோத்குமாரை மீட்கச் சென்றனா். அதே வழியாக மற்றொரு லாரியில் சென்ற ஆரணி அருகே லாடவரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (25), நவகிருஷ்ணன் (23) ஆகியோரும் லாரியை நிறுத்திவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆம்பூரைச் சோ்ந்த சீனிவாசன் (35) என்பவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், வேலூரிலிருந்து ஆம்பூா் நோக்கி இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றவா்கள் மீது மோதியது. இதில் சரவணன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த நவகிருஷ்ணன், சீனிவாசன், சுந்தரமூா்த்தி ஆகிய மூவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆட்டோ ஓட்டுநா் வினோத்குமாா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் இறந்தவா்களின் சடலங்களை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT