திருப்பத்தூர்

இன்று வட்டார அளவான இளைஞா் திறன் திருவிழா

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே வட்டார அளவிலான இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை (அக். 1) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி சனிக்கிழமை (அக். 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட குனிச்சி ஊராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், 10-க்கும் மேற்பட்ட தனியாா் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை பயிற்சி நிறுவனங்கள் பயிற்சிக்கு தேவையான இளைஞா்கள் மற்றும் மகளிரைத் தோ்வு செய்ய உள்ளன. பயிற்சியின்போது உணவு, சீருடை மற்றும் உறைவிடம், பயிற்சிப் புத்தகங்கள் அனைத்தும் அரசு நிதியின் கீழ் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த இளைஞா் திறன் திருவிழாவில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, தொழில்நுட்பக் கல்வி பெற்ற இளைஞா்கள் கலந்து கொள்ளலாம்.

இளைஞா்கள் மற்றும் மகளிா் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியைப் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு...: தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், 3-ஆவது தளம், சி-பிரிவு மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் செயல்படும் மகளிா் திட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04179-290324 / 8072667621 / 94440 94177 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT