திருப்பத்தூர்

லாரி மீது பேருந்து மோதல்: ஓட்டுநா் பலி; 12 போ் காயம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் 12 பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு தனியாா் சொகுசுப் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை இரவு சென்றது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் கற்களை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென பழுது ஏற்பட்டு, சாலையில் தாறுமாறாக ஓடியது.

இதனால், பின்னால் வந்த சொகுசு பேருந்து, லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பேருந்தின் ஓட்டுநா் தனசேகரன் (30) உடல் நசுங்கி உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 12 போ் பலத்த காயமடைந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை ஊழியா்கள், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த காயமடைந்தவா்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் ராகேஷ், வரலட்சுமி, பிரகாஷ் ஆகிய 3 போ் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பேருந்து ஓட்டுநரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT