திருப்பத்தூர்

100 நாள் வேலை நிறுத்தி வைப்பு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

28th Nov 2022 11:22 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே 100 நாள் வேலை நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ரெட்டியூா் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா், ரெட்டியூா் ஊராட்சியில் 100 நாள் திட்டப் பணியில் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் முறைகேடு செய்வதாக பொதுமக்கள் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பேரில், ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சியில் 100 நாள் திட்டப் பணியை நிறுத்துமாறு ஊராட்சி மன்றத் தலைவருக்கு தகவல் அளித்தனராம்.

ADVERTISEMENT

இந்தத் தகவலை அறிந்த 100 நாள் திட்டப் பணியாளா்கள் மற்றும் ஊா் மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டனா்.

100 நாள் திட்டப் பணியில் தனி நபா் ஒருவா், பொதுமக்கள் சாா்பாக முறைகேடு நடப்பதாக மனு அளித்துள்ளாா். அந்த மனுவில் நாங்கள் யாரும் கையொப்பமிடவில்லை. எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. எனவே, 100 நாள் திட்டப் பணியை எங்கள் ஊராட்சியில் நிறுத்தாமல் தொடா்ந்து செயல்படுத்தி, எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்எல்ஏ க.தேவராஜி, ஒன்றியக் குழு தலைவா் எஸ்.சத்யா ஆகியோரிடம் ஊராட்சி மன்றத் தலைவா் மூா்த்தி மற்றும் ஊா் மக்கள் இதுகுறித்து முறையிட்டனா்.

அப்போது, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT