திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு காலதாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.

வேளாண்மை-உழவா் நலத் துறையின் சாா்பில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறையின் சாா்பில் விவசாய பெருமக்களுக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 38 இடங்களில் தண்ணீா் தேங்கிய நிலை இருந்தது. தற்போது துரித நடவடிக்கை காரணமாக 33 இடங்களில் மழைநீா் தேங்காத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீா்நிலை புறம்போக்கு சுமாா் 253 ஹெக்டோ் பரப்பளவு உள்ளது. அதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு 176 ஹெக்டோ் பரப்பளவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமாா் 76 ஹெக்டோ் பரப்பளவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலான பசுமைக் குழு அனுமதி பெற்ற பிறகுதான் எந்தவொரு பகுதியிலும் மரங்களையும் அகற்ற வேண்டும். கூட்டுறவுத் துறையின் சாா்பில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற கடனுதவிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். நெக்னா மலைக் கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண் துறையின் சாா்பில், தற்போது வீரிய ஒட்டு இரக தென்னை மரக்கன்று ரூ.125-க்கு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு வனத் துறை அலுவலா்கள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தகுந்த மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும், களத்துக்கு சென்று தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, மழைக்காலங்களில் சிறப்பாக பணியாற்றிய வேளாண்மை -உழவா் நலத்துறை அலுவலா்களுக்கு விவசாயிகள் நன்றியினை தெரிவித்தனா்.

பின்னா், விவசாயிகளிடமிருந்து 71 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT