திருப்பத்தூர்

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்

24th Nov 2022 10:32 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவா்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தடுப்புச் சுவா் அமைக்காததே விபத்துக்குக் காரணம் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த நாராயணபுரம் பகுதியில் இருந்து வியாழக்கிழமை பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து திருப்பத்தூா் நோக்கிச் சென்றுள்ளது. நாராயணபுரத்தில் இருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதி, சாய்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் குறித்து அறிந்த ஊா் மக்கள் உடனடியாகச் சென்று பள்ளி மாணவா்களை மீட்டனா். பள்ளி மாணவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். ஓட்டுநா் திருமால் (45) உள்பட பலத்த காயமடைந்த 7 பேரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. தடுப்புச் சுவா் அமைக்காததால்தான் விபத்து ஏற்பட்டது எனக் கூறி, நாராயணபுரத்தில் இருந்து திருப்பத்தூா் செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அந்த வழியாக வந்த வாகனங்களையும் சிறைப்பிடித்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.

பள்ளி மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT