திருப்பத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி: 5 பெண்கள் காயம்

14th Nov 2022 11:02 PM

ADVERTISEMENT

 

வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 5 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் ஜோலாா்பேட்டையை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் இருந்து வாணியம்பாடியை அடுத்த மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியாா் காலணி தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளா்கள் 5 போ் திங்கள்கிழமை தொழிற்சாலைக்கு செல்ல ஆட்டோவில் வந்துகொண்டிருந்தனா். ஆட்டோவை வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மேகநாதன் (50) ஓட்டி வந்தாா். வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் மேகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ஆட்டோவில் பயணம் செய்த அலமேலு (35), சந்தியா (27) ஆகியோா் பலத்த காயமும், ஜெயக்கொடி (38), செம்மதி (23), ஸ்ரீமதி (20) ஆகிய லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவா்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அலமேலு, சந்தியா ஆகியோா் தீவிர சிகிச்சைக்கு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீஸாா், மேகநாதனின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT