திருப்பத்தூர்

பட்டா கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

31st May 2022 01:38 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே பட்டா கோரி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி கிராமம் பி.கே.வட்டத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கொடையாஞ்சி பகுதியைச் சோ்ந்த சிலா் கிராம மக்கள் குடியிருக்கும் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி பட்டா வைத்துக் கொண்டு, அவா்களை மிரட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பல தலைமுறையாக குடியிருக்கும் 9 குடும்பத்தினருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் பூங்கொடி, நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் சாந்தி, மண்டலத் துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது ஓரிரு நாளில் குடியிருக்கும் நிலத்தை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT