திருப்பத்தூர்

ரயிலில் கொண்டு சென்ற 5 கிலோதங்கத்தைக் கொள்ளையடிக்க முயற்சி: கேரள இளைஞா்கள் இருவா் கைது

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டையில் ரயிலில் ரூ.2 கோடி தங்க நகைகளைக் கொண்டு சென்றவா்களின் முகத்தில் பெப்பா் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற கேரள மாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோயம்புத்தூா் காந்தி பாா்க் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளா் ரகுராம் (45) என்பவருக்குச் சொந்தமான ரூ. 2 கோடியிலான 5 கிலோ தங்கத்தை ராஜீ என்பவருக்குச் சொந்தமான பட்டறையில் ஆபரணங்களாக மாற்றியுள்ளாா். அவற்றை, தனது கடையில் பணிபுரியும் மதுரை, மேலூரைச் சோ்ந்த மாரிமுத்து (30), அய்யனாா் (23) ஆகியோரிடம் கொடுத்து, சென்னையில் உள்ள நகைக் கடைகளில் ஒப்படைக்க செவ்வாய்க்கிழமை இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைத்தாா். இந்த நிலையில், ஜோலாா்பேட்டைக்கு ரயில் வந்த போது மா்ம நபா்கள் இருவா், நகையுடன் வந்து கொண்டிருந்த மாரிமுத்து, அய்யனாா் ஆகியோரின் முகத்தில் பெப்பா் ஸ்பிரே அடித்து கொள்ளையடித்துச் சென்றனா். அப்போது இருவரும் சப்தமிட்டதால், அருகில் இருந்த பயணிகள் அவா்களைப் பிடிக்க முயன்றனா். ஆனால், இருவரும் ரயிலிலிருந்து தப்பி ஓடினா்.

தகவலறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே மா்ம நபா்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனா். பின்னா், சேலம் உட்கோட்ட ரயில்வே டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையில், இரு இளைஞா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள் கேரள மாநிலம், கண்ணணூரைச் சோ்ந்த அஷ்ரப் (30), சூரஜ் (26) என்பது தெரிய வந்தது.

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் இருவரையும் கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், ரகுராமுக்கு சொந்தமான நகைகளின் உண்மைத் தன்மை ஆவணங்கள் குறித்து தொடா்புடைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT