திருப்பத்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா். தலைமறைவான 3 பேரைத் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முகிலன் (22) (படம்). இவரது கூட்டாளி ராஜேஷ் (18). இருவரும் சனிக்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் திருப்பத்தூா்-சேலம் இணைப்புச் சாலை அருகே பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, டிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்த 4 போ் முகிலனைக் கத்தியால் சரமாரியாக வெட்டு விட்டு தப்பிச் சென்றனா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் முகிலனை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, முகிலனுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற 4 பேரும் மீண்டும் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து முகிலனை வெட்டினா். இதில், முகிலன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், டிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்த திருப்பத்தூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் சுரேஷ் (31) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான கவாப் (எ) சுரேஷ், லோகேஷ், தமிழரசன் ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.