குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரி நாட்டறம்பள்ளி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் பச்சூா் ஊராட்சி துருவன்குட்டைப் பகுதி மக்கள் ஈடுபட்டனா்.
இந்தப் பிரச்னையில் ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் உறுதியளித்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சி பழையப்பேட்டை துருவன்குட்டை காட்டுப் பகுதியில் இருளா் இனமக்கள் 30-க்கும் அதிகமானோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி சாா்பில் புதிய ஆழ்துளைக் கிணறு போடப்பட்டது.
ஆனால் 4 மாதங்கள் ஆகியும் ஆழ்துளைக் கிணற்றுக்கான மின்மோட்டாா் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா்.
இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த சிலா் திங்கள்கிழமை காலை நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, துணைத் தலைவா் தேவராஜ், மேலாளா் கிருஷ்ணன் ஆகியோா் அங்கு வந்து கிராம மக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து, புதிய ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டாா் பொருத்தி ஒரு வாரத்திற்குள் குடிநீா் பிரச்னை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனா்.