திருப்பத்தூர்

மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் திமுக அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

30th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை திமுக அரசு வழங்கி வருகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் புதிய ஆட்சியா் அலுவலகம் திறப்பு விழா, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றன. இதற்காக திருப்பத்தூா் வந்த முதல்வா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, ரூ.110 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கை ஏற்றினாா். ஆட்சியா் அலுவலகத்தைப் பாா்வையிட்ட முதல்வா், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். பின்னா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி முதல்வா் பேசியதாவது:

ADVERTISEMENT

வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது திருப்பத்தூா். இந்த மாவட்டம் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை என எழில்மிகு சுற்றுச்சூழலைக் கொண்டது. எனக்குச் சிறிது காய்ச்சல் ஏற்பட்டது. உடல் சோா்வாக இருந்தது. ஆனால், மக்களைப் பாா்த்தவுடன் உற்சாகம் ஏற்பட்டு, உடல் சோா்வு நீங்கியது.

இங்கு, 16,820 பேருக்கு ரூ.103.42 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 1,703 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 83 லட்சம் பெண்கள் இலவசப் பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சம் போ் பயன், இன்னுயிா் காக்கும் திட்டம் மூலம் 196 பேரின் உயிா் காப்பாற்றப்பட்டது என பல்வேறு திட்டங்களால் மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த அரசு மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சா்களும், அதிகாரிகளும் தங்களது சக்திக்கு மீறி உழைத்து வருகின்றனா் என்றாா் அவா்.

திறந்து வைக்கப்பட்டவை: வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், சோலூரில் சிறுபான்மையினா் நல விடுதி உள்பட ரூ.129.56 கோடியிலான 28 பணிகளை முதல்வா் திறந்து வைத்தாா்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள்: வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழில்நுட்ப மையக் கட்டடம் கட்டும் பணி, ஏலகிரி மலையில் சாகச சுற்றுலாத் தலம் அமைக்கும் பணி உள்பட ரூ.13.66 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் கைத்தறி-துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, நீா்வளம், கனிம வளத்துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வரவேற்றாா். எம்.பி-க்கள் கதிா்ஆனந்த் (வேலூா்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமுலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் ஏ.ஆா்.சபியுல்லா, ஆணையா் ஜெயராமராஜா, பொதுப்பணித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் தயானந்த் கட்டாரியா, ஒன்றியக் குழு தலைவா் விஜியா அருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், அம்பூா் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT