திருப்பத்தூர்

திருப்பத்தூரில் இன்று பொதுப் போக்குவரத்தில் மாற்றம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக திறப்பு விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை அடுத்து திருப்பத்தூரில் புதன்கிழமை (ஜூன் 29) பொது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை-வேலூா் சாலையிலிருந்து சேலம்-தருமபுரி வழியாகச் செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்களும் செட்டியப்பனூா் வழியைத் தவிா்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்ல வேண்டும்.

பருகூா் இணைப்பு சாலையில் இருந்து திருப்பத்தூா் வழியாக வேலூா் செல்லும் அனைத்து கனரக, சரக்கு வாகனங்களும் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை, சேலம், தருமபுரி வழியாக திருப்பத்தூா் வழி வேலூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வெங்களாபுரம் இணைப்புச்சாலை வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாகச் செல்ல வேண்டும்.

உள்ளூா் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் புதன்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திருப்பத்தூா் நகா் பகுதிக்குள் சரக்குகளை ஏற்ற, இறக்க மற்றும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள்:

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் ஏரிக்கோடி வழியாக மடவாளம் இணைப்புச்சாலையில் செல்ல வேண்டும். பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

திருவண்ணாமலை இருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள், காா்கள் அனைத்தும் வேலூா் செல்ல வெங்களாபுரம் இணைப்புச்சாலை வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாகச் செல்ல வேண்டும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக வேலூா் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் அவ்வை நகா் சி.கே.ஆசிரமம் வழியாக புதுப்பேட்டை-நாட்டறம்பள்ளி வழியாக வேலூா் செல்ல வேண்டும்.

கனரக, சரக்கு வாகனங்களைத் தவிா்த்து மற்ற வாகனங்கள் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு செல்ல அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT