திருப்பத்தூர்

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மூன்று மாநிலங்களை இணைக்கும் பழைய ராணுவச் சாலையை புதுப்பிக்க கோரிக்கை

26th Jun 2022 11:58 PM | எம்.அருண்குமாா்

ADVERTISEMENT

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பழைய ராணுவச் சாலையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரங்கல்துருகம், சுட்டக்குண்டா, பொன்னப்பல்லி, காட்டு வெங்கடாபுரம், மத்தூா் கொல்லை, பாரதிநகா், அபிகிரிப்பட்டரை, காரப்பட்டு, பழைய அரங்கல்துருகம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்த ஊராட்சியில் அரங்கல்துருகம் கோட்டை தா்கா, மத்தூா் கொல்லை நந்தி சுனை நீா்வீழ்ச்சி, காட்டு வெங்கடாபுரம் முனியப்பன் ஏரி நீா்வீழ்ச்சி, பொன்னப்பல்லி இடையன் கல், சுட்டக்குண்டா ராணுவ முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.

இதில் சுட்டக்குண்டா கிராமம் அருகே அந்தக் காலத்தில் ராணுவத்தினா் பயன்படுத்திய முகாம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் இந்த இடம் உள்ளது. ராணுவத்தினா் ஆம்பூா், பாங்கி ஷாப், வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, ராள்ளக்கொத்தூா், மங்கம்மா கிணறு, செட்டேரி, இடையன் கல், பொன்னப்பல்லி, தொட்டிக்கிணறு, சுட்டக்குண்டா, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணி நெட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள 89 பெத்தூா் வரை ராணுவத்தினா் தங்களுக்காக பிரத்யேகமாக சாலையை உருவாக்கி ‘ராணுவச் சாலை’ என பெயரிட்டு பயன்படுத்தி வந்தனா். இந்தச் சாலையில் பயணிக்க கால்நடை மேய்ப்போா், விறகு சேகரிப்போா், தமிழக பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் செல்வோா், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோா் என பொது மக்களையும் இந்த ராணுவச் சாலையை பயன்படுத்த அப்போது அனுமதித்து உள்ளனா்.

ADVERTISEMENT

தமிழக மலையோர எல்லை கிராமமான சுட்டக்குண்டாவில் இருந்து, ஆந்திர மலையோர எல்லை கிராமமான 89 பெத்தூா் வரை சுமாா் 6 கி.மீ.தூரமே வனப்பகுதியில் இந்தச் சாலை உள்ளதால் பெரும்பாலானோா் இந்த ராணுவ சாலையை போக்கு வரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனா்.

ராணுவ சாலை நெடுகிலும் மைல் கற்கள் நடப்பட்டு உள்ளன. அதே போல் இங்கு ஜல்லிக்கல் சாலை அமைக்க பயன்படுத்திய உருளை கற்களும் ஆங்காங்கே உள்ளன.

ஆம்பூா், வாணியம்பாடி, போ்ணாம்பட்டு, மாதனூா் பகுதிகளில் இருந்து ஆந்திரம், கா்நாடக மாநிலப் பகுதிகளுக்கு செல்வோா் இந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனா். மேலும், குறைவான நேரத்திலும், குறைவான தூரத்திலும் உள்ளதால் மூன்று மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பெரும்பாலும் இந்தச் சாலையையே பயன்படுத்தினா்.

இந்த வனப்பகுதியில் செல்லும் மங்கம்மா கிணறு, செட்டேரி, தொட்டிக்கிணறு, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணிநெட்டு பகுதிகளில் பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட நீா்நிலைகள் வழிப்போக்கா்கள் தாகம் தணிக்க நீா் அருந்தவும் வசதியாக இருந்துள்ளது.

அக்காலத்தில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்து உள்ளதால் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்களும், தமிழகப் பகுதிகளை சோ்ந்தவா்களும் பெண் கொடுக்கல் வாங்கல் முறையை ஏற்படுத்தி உறவுகளையும் மேம்படுத்தி உள்ளனா். அதனால் இந்த ராணுவ சாலையை ஒட்டி அமைந்து உள்ள தமிழக, ஆந்திர மாநில பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பெரும்பாலும் உறவினா்களாகவே இருப்பா்.

இந்த ராணுவ சாலையையும், சுட்டக்குண்டா கிராமத்தில் இருந்த ‘ராணுவ முகாமையும் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் உள்ளதால், படிப்படியாக வனப்பகுதியில் உள்ள இந்த சாலை பராமரிப்பு இன்றிப் போனது. மேலும், வாகனங்ளில் செல்வோா், கால்நடையாய் செல்வோா், ஆடு மாடுகள் மேய்ப்போா், விறகு சேகரிப்போா், விவசாய தேவைகளுக்காக இலை தழை பறிப்போா், தேன் எடுப்போா், கிழங்கு தோண்டுவோா் என இந்த ராணுவ சாலையை பயன்படுத்தி வருவதும் குறைந்தது.மேலும் கொடிய விலங்குகளின் நடமாட்டம், வனத்துறையின் கெடுபிடியும் இந்த சாலைபயன்பாட்டில் இல்லாமல் போனதற்கான காரணமாகும்.

இப்போது சுமாா் 6 கி.மீ.தூரமே உள்ள இந்த சாலையில் பெண்களையோ, குழந்தைகளையோ பாதுகாப்பு கருதி அழைத்து செல்வது இல்லை. அதனால் ஆண்களும், இளைஞா்களும் மட்டுமே இந்தச் சாலையை கால்நடையாய் செல்ல பயன்படுத்தி வருகின்றனா். தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஆந்திர கிராமங்களுக்கு செல்வோா் 6 கி.மீ.தூரம் செல்ல 60 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிக்கும் நேரம், தூரம், பணம் விரயமாகிறது. எரிபொருள் செலவு, பயண செலவும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள இந்த ராணுவ சாலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் நன்னியாலாவில் கும்கி யானை முகாம், வன உயிரின பூங்கா, வீரணமலை நீா்வீழ்ச்சி, விஜிலாபுரத்தில் அமைய உள்ள குப்பம் உள்ளூா் விமான நிலையம், ராமகுப்பம் விளையாட்டு அரங்கம், அம்மா பகவான் ஆசிரமம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வசதியாக சமீபத்தில் ஆந்திர அரசு இரு வழிச் சாலை அமைத்துள்ளது.

புதியதாக அமைக்கப்பட்ட இந்த இரு வழிச்சாலைகள் ஆந்திர மலையோர கிராமமான 89 பெத்தூா் வரை அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ள யானை தாண்டா அகழி வரை இந்த புதிய இரு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் தமிழக வனப்பகுதியில் இருந்து வெறும் 3 கி.மீ.தூரம் மட்டும் சாலையை தமிழக அரசு புனரமைத்தால் போதும், ஆந்திர அரசும் தனது வனப்பகுதியில் சுமாா் 3 கி.மீ.தூரம் சாலை அமைத்தால் இரு மாநில மக்களின் போக்குவரத்துப் பிரச்னை தீரும். தற்போது ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை அந்த மாநிலஅரசு துவக்கி பணியை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு. செல்வராசு மற்றும் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் தமிழக வனப்பகுதியில் சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு

மேற்கொண்டனா். அந்த ஆய்வின்போது ஆந்திர மாநிலத்தை சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக எல்லையில் ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய ராணுவச் சாலையை புதுப்பிக்க வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT