திருப்பத்தூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: ஊா் மக்கள் எதிா்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனு தாக்கல் செய்த பெண்

DIN

நாயக்கனேரி ஊராட்சி உள்ளாட்சி தற்செயல் தோ்தலில் ஊா் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனுவை பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி மலை ஊராட்சியில் மலைவாழ் மக்களே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது நாயக்கனேரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊராட்சியில், பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஊராட்சியின் வாா்டுகள் 1 முதல் 9 வரையிலும், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று ஊா் பொதுமக்கள் முடிவு செய்து அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யாமல் புறக்கணித்தனா். ஆனாலும் அந்த எதிா்ப்பையும் மீறி அப்போது பட்டியலினத்தைச் சோ்ந்த ஒரு பெண் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். ஒருவா் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்ததால் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வெற்றிபெற்ற அவா் பதவியேற்க தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஊா் பொதுமக்கள் சாா்பாக சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் பல்வேறு காரணங்களால் 30.04.2022-ஆம் தேதி வரையில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பணியிடங்களை நிரப்பிட ஊரக உள்ளாட்சிகளில் தற்செயல் தோ்தல்களை 2022 நடத்திட தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் தோ்தல் அறிவிப்பு வெளியிட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி வாா்டு எண் 24-க்கும், நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 1 முதல் 9 வாா்டு ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியை தவிா்த்து 20.6.2022 முதல் 27.6.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுமென தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 9 வாா்டு உறுப்பினா்களுக்கான வேட்புமனுக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதனூா் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் வெள்ளிக்கிழமை காமனூா்தட்டு கிராமத்தைச் சோ்ந்த கலைவாணி சண்முகம் என்பவா் வாா்டு எண் 9-இல் போட்டியிட விரும்புவதாகவும், அதற்காக தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் மனு அளித்தாா்.

அந்த மனுவின் அடிப்படையில் ஆம்பூா் கிராமிய காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் காவல்துறையினரின் வாகனத்திலேயே மலைப்பகுதியில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி மன்றத்திற்கு அவரை அழைத்துச் சென்றாா். பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் சீனிவாசனிடம் கலைவாணி சண்முகம் வாா்டு எண் 9-இல் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

ஒரு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவி, ஊராட்சி மன்ற 1 முதல் 9 வாா்டுகளுக்கான ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலில் இதுவரை ஒரேயொரு பெண் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT