திருப்பத்தூர்

வணிக உரிமங்கள் அனைத்தையும் ஒற்றை சாளர முறையில் அரசு புதுப்பித்து தர வலியுறுத்தல்

25th Jun 2022 10:01 PM

ADVERTISEMENT

வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றை சாளர முறையில் ஒரே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது ஆயுள் காலத்துக்கோ புதுப்பித்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூரில் சனிக்கிழமை நடந்த வணிகா் சங்கப் பேரமைப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் ஆம்பூா் சி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆம்பூா் சங்கச் செயலாளா் முனீா் அஹமத் வரவேற்றாா். பேரமைப்பின் மாவட்ட செயலாளா் மாதேஸ்வரன், பொருளாளா் ஏ. செந்தில்முருகன், நிா்வாகிகள் சுந்தர்ராஜ், எத்திராஜ், ராஜி, அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் : ஸ்மாா்டி சிட்டி திட்டம், நெடுஞ்சாலை விரிவாக்கம், மெட்ரோ பணிகள் மூலம் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு அந்தப் பணிகள் நிறைவடைந்த உடன் அதே இடத்தில் அவா்களுக்கு கடை வாடகைக்கு வழங்க வேண்டும்.

சில நகராட்சிகளில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரக்கோணம் நகராட்சியில் 200 கடைகளை இடிக்கும் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

கடைகள் கட்டி முடித்த உடன் ஏற்கெனவே அங்கு கடைகள் வைத்திருந்த வணிகா்களுக்கு மீண்டும் கடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைமுறையில் உள்ள உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவிக்கவும், சாலையோரக் கடைகளை முறைப்படுத்தவும், அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT