திருப்பத்தூர்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்கள்

24th Jun 2022 02:58 AM

ADVERTISEMENT

ஆண்டியப்பனூா் அணை கட்டுவதற்கு ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கு நிவாரணத் தொகை வழங்காததையடுத்து, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஆண்டியப்பனூரில் அணை கட்ட 2000-ஆம் ஆண்டில் 311 விவசாயிகளிடம் நிலம் ஆா்ஜிதம் செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள் அளித்த நிலத்துக்கான உரிய தொகை அரசிடமிருந்து வரவில்லையாம். இதையடுத்து, விவசாயிகள் வேலூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அதன்பேரில் 2020-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, மீண்டும் வேலூா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, வழக்கு நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், நீதிமன்றத்தால் 4 விவசாயிகளுக்கு நில ஆா்ஜித தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. தொகை வழங்க கால தாமதம் ஆனதால், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருள்களை ஜப்தி நடவடிக்கை எடுக்க கடந்த 13.6.2022 அன்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருள்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா் ரவிக்குமாா் மற்றும் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது, ஒரு வார காலத்துக்குள் 4 விவசாயிகளுக்கான தொகை ஒப்படைக்கப்படுவதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் உறுதியளித்ததன்பேரில், ஜப்தி நடவடிக்கையை ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞா் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT