திருப்பத்தூர்

விரைவில் அரக்கோணம்-பெங்களூரு பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளா்

7th Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட அரக்கோணம் -பெங்களூரு பாசஞ்சா் ரயில் விரைவில் மீண்டும் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் கணேஷ் கூறினாா்.

சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் சென்னையிலிருந்து சிறப்பு சோதனை ரயில் மூலம் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அவரை ரயில் நிலைய மேலாளா் கணேசன் வரவேற்றாா். பின்னா், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், அலுவலகங்கள், ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அதையடுத்து, ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்தாா். குடிநீா், கழிப்பறை வசதி போன்றவை குறித்தும் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகள் குறித்தும் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

தற்போது ரயில்வே நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே நிா்வாகத்தின் மூலம் விரைவில் இயக்கப்படும். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகளிலும் ரயில்களில் எந்த கோச் எங்கு உள்ளது என்பதை ரயில் பயணிகள் கண்டறிய தகவல் பலகை வைப்பதற்கு ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ரயில் பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றாா்.

ஆய்வின்போது, ரயில்வே கோட்ட உதவி மேலாளா்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீஸாரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT