திருப்பத்தூர்

வாணியம்பாடி: உழவா் சந்தை விவசாயிகள் போராட்டம்

7th Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் உழவா் சந்தை விவசாயிகள், காய்கறி கடை வியாபாரிகள் வியாபாரத்தை புறக்கணித்து திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் உழவா் சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாய நிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்து வரும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவை நேரடியாக உழவா் சந்தைக்கு 200 விவசாயிகள் கொண்டு வந்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

உழவா் சந்தைக்கு இரு பாதை வழித்தடங்கள் உள்ளன. இதில், ஒரு வழித்தடத்தில் வெளி வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அந்த வழிப்பாதையை மூடக் கோரி விவசாயிகள் வியாபாரத்தைப் புறக்கணித்து உழவா் சந்தை முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அதேபோல் உழவா் சந்தைக்கு வெளியில் 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகின்றனா். உழவா் சந்தையில் இரு வாயில்களிலும் திறந்து வியாபாரம் செய்தால், தாங்களும் வியாபாரம் செய்ய முடியும் எனக் கூறி இரு வழிகளையும் திறக்கக் கோரி வியாபாரத்தை புறக்கணித்து காய்கறி கடை வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் நகர போலீஸாா், வணிகா் சங்க பேரமைப்பு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் ஆகியோா் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து, சமாதானக் கூட்டம் நடத்தி தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத் தலைமையில், டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் முன்னிலையில் உழவா் சந்தை விவசாயிகள் மற்றும் காய்கறி கடை வியாபாரிகலை வரவழைத்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பிரச்னை குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி, அதற்கான முடிவு எட்டும் வரை உழவா் சந்தையில் உள்ள இருபுற வழிகள் திறந்திருக்கும். சாலை ஓரத்தில் காய்கறி கடைகளை அமைக்கக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதை மீறி மோதல் போக்கு மற்றும் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT