திருப்பத்தூர்

முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்: திருப்பத்தூா் ஆட்சியா்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம், எக்லாஸ்புரம், வடக்குப்பட்டு கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் சம்பத் வரவேற்றாா்.

இந்த முகாமில் 81 பேருக்கு ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:

ADVERTISEMENT

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 சதவீதம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 40 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவா்களில் 5 சதவீதம் போ்தான் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

வருகிற 10- ஆம் தேதி நடைபெறும் மெகா கரோனா தடுப்பூசி முகாமில் முதல், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாவா்கள், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தகுதியானவா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரகுகுமாா், சித்ரகலா, ஊராட்சித் தலைவா்கள் தனலட்சுமி, பாரதி, மோகனவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்தியவாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT