திருப்பத்தூர்

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை: மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உறுதி

4th Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் பகுதியில் செயல்படும் ஊராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உறுதியளித்தாா்.

நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் பகுதியில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 95 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் சிலா் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, அந்தப் பகுதி மக்கள் பள்ளி வளாகத்துக்குச் சுற்றுச்சுவா் கட்டித் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும், கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையறிந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா ஆகியோா் திங்கள்கிழமை அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

அப்போது, கிராம மக்கள் பள்ளிக்குச் சுற்றுச்சுவா் மற்றும் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தைப் புதுப்பித்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பள்ளிக்குச் சுற்றுச்சுவா் மற்றும் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உறுதியளித்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட திமுக இளைஞரணித் துணை அமைப்பாளா் சிங்காரவேலன், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா் குருசேவ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT