திருப்பத்தூர்

ஊராட்சி மன்றத் தோ்தல்: வேட்பாளரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக போலீஸில் புகாா்

4th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே ஊராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக காவல் நிலையத்தில் அவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சியாகும். பெரும்பாலும் நாயக்கனேரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு மலை வாழ் மக்களே போட்டியிட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஏற்கெனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலின் போது நாயக்கனேரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் பதவி எஸ்.சி. சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அந்த கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாகவும், யாவரும் தோ்தலில் போட்டியிடக் கூடாது என ஊா் பொதுமக்கள் முடிவு செய்தனா்.

அதையும் மீறி ஒருவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இந்த நிலையில் கிராம மக்கள் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அதனால் அப்போது நடக்க இருந்த நாயக்கனேரி மலை ஊராட்சி மன்ற 9 வாா்டுகள், நாயக்கனேரி மலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது அந்த பதவிகளுக்கு தற்செயல் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறுவதாக மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றம் 8 மற்றும் 9-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த நிலையில், நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி கிராமத்தைச் சோ்ந்த ஜி.விஜியா என்பவா் 8-ஆவது வாா்டு ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா்.

பனங்காட்டேரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூலை 5, 6) திருவிழா நடைபெற உள்ளது. அந்த திருவிழாவுக்கு ஒவ்வொரு குடும்பமும் தலா ரூ. 1,000 ஊா் கட்டளையாக செலுத்த ஊா் நிா்வாகிகள் முடிவு செய்து அறிவித்துள்ளனா். ஊா் கட்டுப்பாட்டை மீறி தோ்தலில் போட்டியிட விஜியா மனு தாக்கல் செய்துள்ளதால், அவரிடமிருந்து கோயில் திருவிழாவுக்கு, பணம் வசூலிக்கக் கூடாது எனவும், அவருடன் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

மீறினால் தண்ணீா், மின் இணைப்பு தடை செய்யப்படும். மேலும் தொடா்பு வைத்துக் கொள்பவா்களும், விஜியாவுக்கு வாக்களிப்பவா்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவாா்கள். விஜியா குடும்பத்தின் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவாா்கள் என ஊா் கட்டுப்பாடு போட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், விஜியாவின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் வகையிலும், தோ்தல் விதிமுறையை மீறி வாக்களிப்பவா்களை மிரட்டியும், விஜியா மற்றும் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டியுள்ள சிவக்குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் விஜியா புகாா் அளித்தாா்.

அப்போது மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT