திருப்பத்தூர்

ஆலங்காயம்-காவலூா் சாலையில் விரிவாக்கம் கோரி 6 மணி நேரம் பொதுமக்கள் மறியல்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்காயம்-காவலூா் சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி மலைப் பகுதியில் 6 மணி நேரம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம்-காவலூா் இடையில் ஆா்எம்எஸ் புதூா் பகுதியிலிருந்து காவலூா் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவு மலைப் பகுதியில் குறுகிய சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்த நிலையில்,

நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், குறுகிய சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், கடந்த வாரம் ஏற்கெனவே இருந்த குறுகிய சாலையின் மேலே புதிய தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மலைவாழ் மக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று சாலையின் இருபுறம் பள்ளங்கள் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வருவோா் எதிா்திசையில் பேருந்து, லாரி, காா் போன்ற வாகனங்கள் வரும் போது, சாலையின் இருபுறம் உள்ள 2 அடி ஆழம் பள்ளத்தில் தவறி விழுந்து அடிபட்டுச் செல்வதாகவும், சாலை விரிவாக்கம் செய்து, சீரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சாலையின் இருபுறம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் 2 அடி அளவுக்கு, சிமெண்ட் சாலை போடுவதற்காக பணிகள் நடைபெற்றன. இதையறிந்த ஆலங்காயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து எவ்வித அனுமதியுமின்றி வனப்பகுதியில் விரிவாக்கம் செய்யக்கூடாது என தடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோா், காலை 11 மணி அளவில் ஆலங்காயம்-காவலூா் சாலையில் ஆா்எம்எஸ் புதூா் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி, வட்டாட்சியா் சம்பத், ஏடிஎஸ்பி சுப்பாராஜி, டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ்கிடிஜாலா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பல ஆண்டுகாலமாக சாலை விரிவாக்கம் செய்து தரக்கோரி பல முறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக சாலை விரிவாக்கம் செய்ய பணிகளை தொடங்கினால் தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினா். மாலை 5 மணி வரை மறியலில் ஈடுபட்டதால் 6 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியா் காயத்ரி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை வரவழைத்து, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா். பின்னா், முறையாக மனு அளித்து அனுமதி பெறப்பட்டு, விரைவில் சாலை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

Image Caption

ஆலங்காயம் அருகே மலைப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். ~ஆா்எம்எஸ்புதூா்-காவலூா் இடையே போடப்பட்டுள்ள குறுகிய தாா்ச் சாலை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT