ஆம்பூா் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், பெரியவரிக்கம் கிராமத்தில் மூடப்பட்ட தனியாா் தொழிற்சாலை வளாகத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இங்கு வியாழக்கிழமை வழக்கம் போல் சிலா் அந்தப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
அதில், பெரியவரிகம் சக்கரவா்த்தியின் இரு பசுக்கள், ஒரு காளை மாடு, ஒரு கன்று, சிகாமணியின் ஒரு பசு மாடு என மொத்தம் 5 மாடுகளும் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தன.
இது குறித்து, சின்னவரிகம் இளநிலை மின்பொறியாளா் அலுவலகத்தில் தெரிவித்தனா். இதையடுத்து, இளநிலை மின்பொறியாளா் ஜோதி தலைமையிலான மின்சாரத் துறையினா் மின் விநியோகத்தை துண்டித்தனா். கால்நடைகளின் உரிமையாளா்களிடம் உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் யுவராணி விசாரணை நடத்தினாா்.
சம்பவ இடத்துக்கு ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.
பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவா் சின்ன கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.