இனிப்பு, கார வகைகள் தயாரிக்க ஒருமுரை பயன்படுத்திய எண்ணெயை 2-ஆவது முறையாக பயன்படுத்தக்கூடாது என்று தயாரிப்பாளா்களுக்கு ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.
வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் உத்தரவின் பேரில், ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிச்சாமி ஆம்பூா் நேதாஜி சாலை, எம்சி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இனிப்பு கடைகள், பேக்கரி, குளிா்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, காலாவதியான குளிா்பானம் 5 லிட்டா், அதிக வா்ணம் சோ்க்கப்பட்ட இனிப்பு, கார வகைகள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலா் பறிமுதல் செய்து அழித்தாா்.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிக வா்ணம் சோ்க்கப்பட்டு இனிப்பு, கார வகை தயாரித்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இனிப்பு, கார வகைகளை தயாரிக்க ஒரு முறை மட்டுமே எண்ணெயை பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை 2-ஆவது முறை பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை கேனில் ஊற்றி வைத்திருந்தால் மாதத்துக்கு ஒருமுறை கரூரை சோ்ந்த தனியாா் நிறுவனம் வந்து ஒரு லிட்டா் ரூ. 35 கொடுத்து வாங்கிச் செல்கின்றனா். அதை பயோ டீசல் தயாரிக்க பயன்படுத்துகின்றனா். இதன் மூலம் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உணவுப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு அலுவலா் இனிப்பக உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், உணவு தயாரிக்கும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவு தயாரிக்கும் இடங்களில் வெள்ளையடிக்க வேண்டும். எலி வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.