திருப்பத்தூர்

பள்ளியில் கல்வி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN

வாணியம்பாடி அருகே பள்ளியில் ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 196 மாணவா்கள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்பட 8 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால் தற்காலிகமாக அந்தப் பகுதியில் உள்ள மாற்று இடத்தில் பள்ளி இயங்கி வந்தது. இதையடுத்து பாழடைந்த பள்ளியை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட கல்வித் துறை சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளிக் கட்டடம் கட்ட தடை இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்காலிகமாக இயங்கி வந்த பள்ளிக் கட்டடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலேயே கடந்த சில மாதங்களாக பள்ளி இயங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் இரண்டு வகுப்பு மாணவா்களை அமர வைத்தும், மரத்தடியில் அமர வைத்தும் ஆசிரியா்கள் பாடம் நடத்துவதாகத் தெரிகிறது. இதனால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவா்களை கடித்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது குறித்து பல முறை கல்வி அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சில மாணவா்கள் பூச்சி கடித்ததால் அவா்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனராம். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளிக்கு வந்தனா். அப்போது ஆலங்காயம் வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா ஆய்வுக்காக பள்ளிக்கு வந்தபோது, அவரை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டனா்.

பின்னா் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களிடமும், ஆசிரியா்களிடம் வட்டாரக் கல்வி அலுவலா் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT