திருப்பத்தூர்

மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டி

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வி மூலம் மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவா்களின் கலைத்திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ADVERTISEMENT

அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 -ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடத்தப்பட உள்ளது.

வட்டார அளவில் டிச. 5-க்குள், மாவட்ட அளவில் டிச. 6 முதல் 10-ஆம் தேதி வரை, மாநில அளவில் ஜனவரி 3 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாநில அளவிலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT